ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : ஸஹாபாக்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் றஸூலுல்லாஹ்வையே முற்றிலும் பின்பற்றினார்கள். றஸூலுல்லாஹ்வைப் பின்பற்றுவதே போதுமாக இருக்கும் போது ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?

பதில் : இந்த வினாவில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் சொல்வதற்கு இலகுவானதாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தும் நிலையில் இல்லை. அதாவது,

நாம் “எவ்வாறு றஸூலுல்லாஹ்வை நேரடியே பின்பற்றுவது”

எனக் கேட்டால்

“அதற்கு ஹதீஸ் இருக்கிறதே” எனக் கூறுவார்கள். “

அந்த ஹதீஸை சுமந்து வந்தவர்கள் யார்” எனக் கேட்டால் அதற்கு “ஸஹாபாக்கள்தான் அதனைச் சுமந்து வந்தார்கள்” என பதில் கூறுவார்கள்.
அவ்வாறாயின், ஒரு ஹதீஸ் அறிவிக்கும் விடயத்தை வைத்துக் கொண்டு அந்த ஹதீஸ் எச்சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்பட்டதென்று தெரியாமல், அந்த ஹதீஸ் அறிவிக்கும் விடயம் தொடர்பாக கூறும் ஏனைய ஹதீஸ்களை அறியாமல் எவ்வாறு ஒரு ஹதீஸின் அறிவிப்பை மட்டும் பின்பற்றுவது?
எம்மால் தேடிப் பிடிக்க முடியாத இக்கேள்விகளுக்கான பதிலை நாம் ஸஹாபாக்களின் பால் திரும்பினால் தான் பெற்றுக் கொள்ளாம். ஏனென்றால் அவர்களின் நடவடிக்கைகளில் தான் றஸூலுல்லாஹ்வை பரிபூரணமாகப் பின்பற்றும் வழிமுறையை நாம் காண முடியும்.

சுன்னா என்பது ஒரு நபிமொழியைக் கூறிக் காட்டுவதல்ல. மாறாக, அந்நபிமொழி ஸஹாபாக்களின் காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவ்வாறே நடைமுறைப்படுத்துவதே சுன்னாவாகும்.

இந்த அடிப்படையை அறியாத சிலர் ஸஹீஹுல் புஹாரியின் ஹதீஸ் என்று கூறி அதில் ஒரு ஹதீஸைக் காட்டி அதிலிருந்து சட்டத்தையும் எடுத்து இறுதியில் இதுதான் சுன்னா என்கிறார்கள். இங்கு ஹதீஸ் ஸஹீஹாகவும் தரமாகவும் இருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த ஹதீஸின் விளக்கமும் தரமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும்.
ஹதீஸ் அதன் ரிவாயத் ரீதியாக தரமானதாக இருந்தாலும் அந்த ஹதீஸை விளங்கியவர் தரமாகவும் பரிபூரணமாகவும் விளங்கினார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எவரும் அவரது சொந்த விளக்கத்திற்கு உத்தரவாதமளிக்க முடியாது. ஆனால் ஸஹாபாக்கள் விளங்கியிருப்பது தரமானதும் சரியானதும்தான் என்பதற்கு அல் குர்ஆன் உத்தரவாதமளிக்கிறது.
ஸஹாபாக்களைப் பற்றி அல் குர்ஆன் கூறுகிறது :

அல்லாஹ் அவர்களைத் திருப்தியடைந்தான் அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனைத் திருப்தியடைந்தார்கள்

எனவே, நாம் ஸஹாபாக்களின் விளக்கத்தையும் அவர்கள் நடைமுறைப்படுத்தியதையும் புரிந்து கொண்டால்தான் ஹதீஸைப் பின்பற்றுவதிலும் தரமாக அமைய முடியும்.

இதனை தவிர்ந்து கொண்டு ஹதீஸிலிருந்து நாம், நாமாக ஒரு விளக்கத்தை எடுக்கும் போது அந்த விளக்கத்தின் அடிப்படையில் அமையும் எமது செயற்பாடுகளைச் சரியென்று கூறுவதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை.
இத்தவறான அணுகுமுறையினால்தான் இஸ்லாமிய உம்மத்தினுள் பித்அத்கள் உருவாகின. ஹதீஸ்களையும் ஆயத்களையும் தாமாகவே விளங்கி அதிலிருந்து சட்டங்களை எடுப்பதன் காரணமாகவே பித்அத்கள் தோன்றுகின்றன.
ஸஹாபாக்களின் அடிச்சுவட்டுடன் விளக்கங்களை எடுக்கும் போது புதிய விளக்கங்கள் உருவாகுவதில்லை. அத்தோடு, ஸஹாபாக்கள் அன்று செயற்பட்ட அடிப்படையில் இன்றும் எம்மால் செயற்பட முடிகிறது.
ஸஹாபாக்களின் விளக்கத்தை விட்டுவிட்டால் அதனால் புதியதொரு மார்க்கம் உருவாகி விடுகிறது. அப்புதிய மார்க்கமே பித்அத் எனப்படுகிறது.
எனவே ஸஹாபாக்கள் விளங்கிய பிரகாரம் நாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதற்கே உலமாக்கள் ஸஹாபாக்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறு கூறினார்கள்.
Advertisements