ஷேக் அல்பானி மீது சொல்லப்படும் குறைகளும் அதற்கான தக்க பதில்களும்

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

சுன்னாவின் உலமாக்களிடம் அழைப்புப் பணியில் ஸஹாபாக்களின் வழிமுறையைப் பின்பற்றும் போக்கு காணப்படுகிறது. இருந்தாலும் அவ்வுலமாக்கள் சில சமயங்களில் பிக்ஹ் விடயங்களில் மத்ஹபின் கருத்தைக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் அந்தக் கருத்தில் அவர்கள் பிடிவாதத்துடன் நடந்து கொள்வதில்லை. அவர்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நிருபிக்கப்படுபவற்றை ஏற்றுக் கொள்வார்கள்.

அவ்வாறு பிக்ஹ் விடயங்களிலும் ஸஹாபாக்களின் வழிமுறையைத் தரமாகப் பின்பற்றிய உலமாக்களில் மிக முக்கியமானராக ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்களைக் குறிப்பிடலாம்.

ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி ரஹீமஹுல்லாஹ் பிக்ஹ் விடயங்களில் கூட எவ்வாறு ஸஹாபாக்களின் வழிமுறையைப் பின்பற்றினார் என்பதைப் பற்றி இங்கு குறிப்பிடுவது பயன்மிக்கதாக அமையலாம்.

ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் பிக்ஹிலும் ஓர் அஸரியாகவும் ஸலபியாகவும் இருந்தவர். அதாவது, அவர் பிக்ஹின் பாடங்களையும், குர்ஆன் சுன்னாவின் தீர்ப்புகளையும் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையிலேயே முன்வைத்தார். அத்தோடு அவர் எந்தவொரு மத்ஹப்களுக்கும் சார்பாகத் தீர்ப்பளிப்பவராக இருக்கவில்லை. அனைத்து மத்ஹப்களுக்கும் மத்தியில் நடுநிலையோடு செயற்பட்டு ஸஹாபாக்களின் விளக்கத்தை நிலைநாட்டினார்.

ஷெய்க் அல்பானியுடைய நூல்களான ஸிபது ஸலாதுந்நபி, அஹ்காமுல் ஜனாயிஸ், ஆதாபுஸ் ஸிபாப் போன்ற இன்னும் அவரது அனைத்து நூல்களும் அவர் அனைத்துப் பாடங்களிலும் மத்ஹப்களின் கருத்துகளைத் தவிர்த்து ஹதீஸ்களோடு ஸஹாபாக்களின் விளக்கத்தினை முன்வைத்திருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஷெய்க் அல்பானியின் இந்த அணுகு முறையினை சிலர் குறை கூறினார்கள். அதாவது, அல்பானி பிக்ஹில் பேசும் போது அது தொடர்பாக ஏனைய உலமாக்களின் கருத்துக்களை முன்வைப்பதில்லை. மாறாக, தனது தீர்ப்பை மட்டுமே முன்வைக்கிறார் என்ற குற்றச் சாட்டைக் கூறினார்கள்.

இவர்கள் கூறுவது போன்று ஷெய்க் அல்பானி ரஹீமஹுல்லாஹ் மிகக் குறைவாகவே ஏனைய நூல்களை ஆதாரங்களுக்காக குறிப்பிடக்கூடியவராக இருந்தார். அதன் காரணம் என்னவென்றால், ஷெய்க் அல்பானியுடைய ஆராய்ச்சி எவருடைய கருத்தையும் தேடிப்பிடித்துக் கூறுவதற்காக இருக்கவில்லை. மாறாக, ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் ஒரு விடயத்தின் தீர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மாத்திரம் முன்வைப்பதோடு அவர் நின்று கொண்டார்.

எனவேதான் ஒரு விடயத்தில் ஸஹாபாக்களின் விளக்கமும் தீர்ப்பும் இதுதானென்று இருக்கும் போது அதற்குச் சார்பாகவோ எதிராகவோ பேசியவர்களின் கருத்துக்களைக் கவனிப்பதை அவர் அவசியமாகக் கருதவில்லை. அவ்வாறான கருத்துக்களைக் கவனிப்பதில் ஷெய்க் அல்பானி ரஹீமஹுல்லாஹ் மிகக் குறைவாகவே கவனம் செழுத்தினார். இந்த அணுகு முறை அனேகமான உலமாக்களிடத்தில் காணப்படவில்லை.

Advertisements