தொழும் முறையும் அதன் வீடியோ செயல் முறை விளக்கத்தின் தடையும்

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : சிலர் மக்களுக்கு தொழும் முறையைச் சரியாகக் காட்டுவதற்காக தொழுகையை வீடியோ எடுத்துக் காட்டுகிறார்கள். இது சரியான வழிமுறையா?

பதில் : இது தவறான வழிமுறையாகும். முதலாவதாக, வீடியோ எடுப்பது ஹராமாகும். ஏனென்றால் அதில் உயிருள்ளவற்றின் உருவம் இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

மறுமையில் அதிகமாக வேதனை செய்யப்படுபவர்கள் அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு ஒப்பாக ஆகுவதற்கு முயல்பவர்களே! (புஹாரி, முஸ்லிம்)

இந்நபிமொழியின் அடிப்படையில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக உருவாக்குவதற்கு முயல்வதில் மிகவும் பொருத்தமான உதாரணம்தான் வீடியோ எடுப்பதாகும்.

எனவே வீடியோ எடுப்பவர்களுக்கான தண்டனை அல்லாஹ்விடத்தில் மிகவும் கடுமையானது. இத்தீர்ப்பையே சுன்னாவின் இமாம்களான ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி, ஷெய்க் அப்துல்லாஹ் பின் பாஸ், ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல் உஸைமீன், ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி, ஷெய்க் யஹ்யா இப்னு அலி அல் ஹஜுரி, ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத், ஷெய்க் உபைத் அல் ஜாபிரி, ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் ஹாதி, ஷெய்க் ரபீ அல் மத்ஹலி இன்னும் ஏனையவர்களும் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனாலும் சிலர் வீடியோ எடுப்பது ஆகுமானது எனக் கூறித் திரிந்தாலும் முஸ்லிம்கள் இத்தவறான கருத்தைத் தவிர்ந்து கொண்டு சுன்னாவின் இமாம்கள் காட்டித் தந்த வழிமுறையைப் பெற்று அதன் படி செயற்பட வேண்டும்.

இரண்டாவதாக, தொழுகையை வீடியோ எடுத்து அதனை நிரூபிப்பதற்காகப் பயன்படுத்துவதென்பது றஸூலுல்லாஹ் காட்டித் தந்துள்ள வழிமுறைக்கு மாற்றமாகச் செயற்படுவதாகவே அமையும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்.

இதனை நபியவர்கள் ஸஹாபாக்களை நோக்கிக் கூறினார்கள். நபிகளாரின் தொழுகையை நேரில் கண்டவர்கள் ஸஹாபாக்கள் மாத்திரம்தான்.

ஸஹாபாக்கள் நபியின் தொழுகை முறையை மற்றவர்களுக்கு உருவமாக வரைந்து காட்டுவதன் மூலம் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே ஸஹாபாக்கள் கையாளாத வழிமுறை எமக்கும் அவசியமற்றதாகும்.

அவர்கள் றஸூலுல்லாஹ்வின் செயல்களை பிறருக்கு வார்த்தைகளின் மூலமே எடுத்துக் காட்டினார்கள். அது ஸனத் அடிப்படையில்தான் பின்வந்தவர்களைச் சென்றடைந்தது. இதுவே சிறந்த வழிமுறையாகும்.

இதனைத்தான் ஹதீஸின் வாசகம் பின்வருமாறு கூறுகிறது :

சிறப்பான பாதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையாகும்.

எனவே, வார்த்தைகள் மூலமாக வர்ணிக்கப்பட்டுள்ள நபியின் வழிமுறையை கல்வி ரீதியாகக் கற்று அதனை விளங்கி அதனைப் பின்பற்றுவதுதான் தொழுகை மட்டுமின்றி ஏனைய அனைத்து அம்சங்களிலும் உள்ள சட்டங்களைப் பின்பற்றுவதன் ஆதாரபூர்வமான வழிமுறையாகும்.

ஆகவே, தொழும் சரியான முறையை வீடியோ மூலம் எடுத்துக் காட்டுவது தவறானதாகும். தடுக்கப்பட்டதாகும்.

Advertisements