அந்நிய மதங்களின் ஒப்பீட்டு தஃவாவும் அதன் வழிகேடுகளும்

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : இன்று உலகில் மத ஒப்பீட்டு ரீதியாக அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்கள் அந்நிய மதங்களின் வேத நூல்களை ஆராய்ந்து அவ்வேத நூல்களிலுள்ள தவறுகளை அல் குர்ஆனைக் கொண்டு நிரூபித்துக் காட்டி அந்நிய மதத்தவர்களை இஸ்லாத்தைத் தழுவச் செய்கிறார்கள்.

அந்நிய மதங்களின் நூல்களை ஆழமாகக் கற்பது முஸ்லிம்களுக்கு அவசியமில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதனை நாம் மக்களிடம் கூறினால் எம்மை நோக்கி அவர்கள் , நீங்கள் மாற்று மதத்தவர்களை நோக்கி எவ்வித அழைப்புப் பணியும் செய்வதில்லை,  அந்நிய மதத்தவர்களை இஸ்லாத்தில் இணைவதற்கு நீங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை” என்று குற்றம் கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் எமக்குத் தெளிவுபடுத்துவீர்களா ?

பதில் : நீங்கள் குறிப்பிடும் மனிதர்கள் செய்கின்ற அழைப்புப் பணி அல்லாஹ் தடுத்துள்ள வழிமுறையிலேயே அமைந்திருக்கிறது. அல்லாஹ் தடுத்துள்ள வழிமுறைகளைக் கையாண்டு மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தில் சேர்ப்பதனால் அவர்கள் இஸ்லாத்தில் இணைவதாக ஆக மாட்டாது.

இன்று ஸாகிர் நாயக் போன்றவர்களினால் மாற்று மதங்களை ஒப்பீட்டு ரீதியாக ஆராய்ந்து செய்யப்படும் அழைப்புப் பணியினால் இஸ்லாத்திற்கு அநியாயமிழைக்கப்படுகிறது என்பதுதான் உண்மையாகும்.
அதாவது, மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் நுழைந்ததாகக் கூறினாலும் அவ்வாறு நுழைந்தவர்களின் உண்மையான நிலையை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அவ்வாறு இஸ்லாத்தில் நுழைந்தவர்கள் என்ன நோக்கத்தில் நுழைந்தார்கள் என்று எம்மால் கூற முடியாது. அவர்கள் ஷஹாதத் கூறியதனால் நாம் அவர்களை முஸ்லிம்கள் என ஏற்றுக் கொள்கிறோம்.

அறபிகளின் சமூகத்தின் மத்தியில் ஸஹாபாக்களின் விளக்கம் கைவிடப்பட்டதுதான் இன்றுள்ள அனைத்துப் பிரிவுகளும் கூட்டங்களும் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. அவர்கள் அறபிகளாக இருந்த போதும் ஏனைய சிந்தனைப் போக்குகளை தமது மார்க்கத்தினுள் நுழைத்ததன் காரணமாக அல் குர்ஆன், சுன்னாவின் விளக்கத்தில் தங்களது சுய சிந்தனையைப் புகுத்தி விட்டார்கள். இது அறபிகளின் சமூகத்தில் இருக்கும் நிலையாகும்.

அவ்வாறாயின், அறபிகளல்லாத ஏனைய சமூகத்தவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? அறபி தெரிந்த சமூகத்தில் அவர்கள் குர்ஆனினதும் சுன்னாவினதும் பொருளை நன்கு புரிந்த நிலையிலும் ஸஹாபாக்களின் விளக்கத்தைத் தவிர்ந்து கொண்டதன் விளைவாக இஸ்லாமிய உம்மத் பல பிரிவுகளாகப் பிரிவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறதென்றால் அறபியல்லாத சமூகங்களின் நிலை குறித்து நாம் விளக்க வேண்டிய தேவையில்லை.

அறபி மொழியை அறியாத சமூகங்களை இஸ்லாம் காட்டித் தந்துள்ள சரியான வழிமுறையில் இஸ்லாத்தின் நுழைவதற்கு வழிகாட்டாமல் அந்நிய வழிமுறைகளை இன்றுள்ள அழைப்பாளர்கள் கையாண்டதனால் இஸ்லாத்தில் நுழைந்தவர்கள் அறபி மொழியே தெரியாத நிலையிலும் கூட இஸ்லாத்தில் நுழைந்து சில காலத்துக்குள்ளேயே பிரச்சாரம் செய்வதற்கும் அல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்கும் களமிறங்கி விடுகிறார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படையைப் பற்றிய அறிவு கூட இவர்களிடம் தலைகீழானதாகவே இருக்கின்றது. அத்தகைய தன்மைகளைக் கொண்டவர்களுக்கு உதாரணமாக Yusuf Estee என்பவரைக் குறிப்பிடலாம்.

இஸ்லாமிய உம்மத்தில் காதியானி என்ற கூட்டத்தினர் காபிர்கள் என்று அனைவரும் அறிந்திருக்கும் நிலையில் Yusuf Estee காதியானிகளும் முஸ்லிம்களில் ஒரு கூட்டம் என்று கூறுகிறார். அவரது இக்கூற்றை அவர் அறியாமல் சொல்லியிருக்கலாம் எனக் கருதி நான் அவருக்கு அவரது தவறை எடுத்துக் காட்டிய போது அவர் எனது உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமல் எனக்கு மறுப்பளித்து தனது கருத்து சரியென்று வாதித்தார்.

இவரது இந்தப் போக்கைக் கவனித்த போது, அவர் இஸ்லாத்தினுள் நுழைந்து இஸ்லாத்தினை அழிக்க வந்தவராக இருப்பார் , அல்லது இஸ்லாத்தின் அடிப்படையைத் தெரியாதவராக இருப்பார் என நான் கருதினேன்.

இந்த இரண்டில் எதனை அவர் கொண்டிருந்தாலும் அவருக்கு பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது. அவர் இஸ்லாத்தின் எதிரியென்றால் அவரை இஸ்லாத்தினைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதியளிக்க முடியாது. அவர் அறியாதவராக இருந்தால் முதலில் அவர் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் நுழைந்தவர் என்ற பெயரில்தான் இன்று Yusuf Estee என்பவரை பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிறிஸ்தவராக இருந்த Yusuf Estee இஸ்லாத்தில் நுழைந்து இவ்வாறெல்லாம் செயற்படும் போது அவரது நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை அல்லாஹ்வே அறிந்தவன் என்றுதான் கூற வேண்டும்.

இந்த மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் ஷெய்க் அல்பானியையும் கூட விமர்சனம் செய்திருக்கிறார். இவர் ஷெய்க் அல்பானியை விமர்சிப்பதென்றால் இவரை இஸ்லாத்தின் அழைப்புப் பணியில் ஈடுபடுத்துவது எத்தகையதொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணரலாம்.

ஸாகிர் நாயக் போன்றவர்கள் இஸ்லாத்தின் கொள்கை போன்ற அடிப்படை அறிவில் கூட மிகக் குறைந்த தரத்திலும் , இல்லாதவராக இருக்கிறார். இவர்தான் இன்று மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

இந்நிலையில் மக்கள் இவரை பிரபலமாக்கி விட்டார்கள். இவரின் இந்நிலை ஒருபோதும் நீடிக்கப்போவதில்லை என்பது உறுதி. சுருங்கச் சொன்னால் இவர்கள் அனைவர்களும் அறிவீனர்கள் என்றுதான் கூற வேண்டும்.

Advertisements