சவூதியும் மன்னாராட்சியும் தெளிவுகளும் விளக்கங்களும்

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : ஸஊதி அரேபியா மன்னராட்சியைக் கொண்டதொரு நாடாகும். ஆனால் இஸ்லாத்தில் ஆட்சி என்பது கிலாபத் ஆட்சி மட்டும்தான். எனவே ஸஊதியின் மன்னர் ஆட்சியை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?  என ஹஸ்புத் தஹ்ரீர் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். இவர்களின் இக்கூற்றினைப் பற்றி நீங்கள் என்ன பதில் கூற விரும்புகிறீர்கள்?

பதில் : ஒவ்வொரு காரியத்திற்கும் இஸ்லாத்தில் ஒரு வழிமுறை இருக்கின்றது. அதே போன்று சில உலக விடயங்களில் இஸ்லாம் தடை செய்யாதவைகளும் உண்டு. கல்வியின் அடிப்படை (உஸூல்) ரீதியாகக் கூறுவதென்றால் இபாதத்களில் அல் குர்ஆனும் சுன்னாவும் காட்டித் தராதவைகளைச் செய்வது தடை செய்யப்பபட்டதாகும். உலக விடயங்களில் எவற்றை அல் குர்ஆனும் சுன்னாவும் தடுக்கவில்லையோ அவற்றைச் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.
இந்த அடிப்படையில் மனிதர்கள் உலக வாழ்வில் செயற்படும் போது அவர்களின் காரியங்களில் எதனையேனும் தடுப்பதற்கு அல் குர்ஆனிலோ சுன்னாவிலோ நேரடியே ஆதாரங்கள் இல்லாத போது அக்காரியங்களைத் தடுப்பதற்கு எவருக்கும் மார்க்கம் ரீதியாக உரிமையில்லை.
ஆட்சி எனும் போது அதன் இஸ்லாமிய வழிமுறை கிலாபத் ஆகும். கிலாபத் என்பது முஸ்லிம்கள் தங்களை ஆட்சி செய்வதற்குத் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அமைகின்ற ஆட்சியாகும்.
அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவும், இஸ்லாத்தின் கல்வியையும், மார்க்கத்தின் சட்டதிட்டங்களையும் முறையாகக் கற்றறிந்த ஒரு அறிஞராகவும் கலீபா என்பவர் இருப்பார். இந்த வழிமுறையில் ஆட்சி அமைந்தால் அதனை கிலாபத் எனக் கூற முடியும்.
ஆனால் இன்றைய காலத்தைக் கவனித்தால் முஸ்லிம்கள் பல்வேறு இயக்கங்களாகப் பிரிந்து தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வழிகேடர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இவர்களில் எவரால் கலீபாவாக இருப்பதற்குத் தகுதியான அறிவைப் பெற்றவர் யாரென்று அடையாளம் காண முடியும் ?
முஸ்லிம்கள் தங்களால் ஒரு தகுதியான தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத இந்நிலையைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் மீது ஆட்சி செய்யும் பொறுப்பை காபிர்களிடம் ஒப்படைக்க முடியுமா ?
இவ்வாறான காரணங்களினால் உலகில் பல வகையான ஆட்சிகள் நடைபெறுகின்றன. உலகில் இன்றும் பல இடங்களில் மன்னர் ஆட்சி நடைபெறுகின்றது. அதற்கு உதாரணமாக மொரோக்கோ, ஐக்கிய இராச்சியம், ஜோர்தான், ஸஊதி அரேபியா போன்ற நாடுகளின் ஆட்சிகளைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு இன்று பல நாடுகளில் மன்னர் ஆட்சி நடைபெறும் போது குற்றச் சாட்டுகள் அனைத்தும் ஸஊதி அரசுக்கு எதிராக மட்டுமே சொல்லப்படுவது ஏன் ?

ஏனைய மன்னர் ஆட்சி நடைபெறும் நாடுகளிலிருந்து வித்தியாசமாக ஸஊதியின் ஆட்சி இஸ்லாத்தினை நிலைநாட்டுவதற்கு முன்வந்தது. அதனடிப்படையில் அந்நாட்டின் அரசியல் காரியங்களை ஆல ஸஊத் என்ற குடும்பத்தினரும் மார்க்க விடயங்களை ஆல ஷெய்க் என்ற குடும்பத்தினரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
ஆல ஷெக் எனப்படுவது, இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமி அந்நஜ்தி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் குடும்பமாகும். இவ்விரு குடும்பத்தினரின் கூட்டான முயற்சியினால் ஸஊதி நாட்டில் இஸ்லாமிய பிரச்சாரம் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் அந்நாட்டின் மக்கள் மர்க்கத்தை விளங்குவதற்கும் அதனைத் தரமாகப் பின்பற்றுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
மேலும் அந்நாட்டில் இஸ்லாத்தின் சட்டங்கள் நிலைநாட்டப்பட்டன. அந்த நாட்டுக்குத் தகுதியான கலீபா எப்போது தேர்ந்தெடுக்கப்படுவாரோ அன்று வரை இந்த நடைமுறையை அந்நாட்டு அரசு செயற்படுத்தி வருகிறது.

ஸஊதி அரசுக்கு எதிராகக் குறை சொல்பவர்கள் அந்நாட்டு அரசு இஸ்லாத்தை நிலைநாட்டியதற்காகவே குறை சொல்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

அது மட்டுமின்றி, அந்நாட்டின் உலமாக்கள் குர்ஆனையும் சுன்னாவையும் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையில் நிலைநாட்டுவதன் பால் மக்களை அழைக்குமாறு அவ்வரசினால் ஏவுப்பட்டுள்ளார்கள். மேலும், அந்நாட்டில் இஸ்லாமிய நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு அந்நாட்டின் உலமாக்களுக்கென்று தாருல் இப்தா என்ற மார்க்கத் தீர்ப்பு வழங்கும் குழு ஏற்படுத்தப்பட்டு மார்க்கத் தீர்ப்பு வழங்கும் முப்தியாக இருப்பவரை ஒரு அமைச்சர் என்ற பதவியில் அந்நாடு வைத்துள்ளது.
எனவே அந்நாட்டின் முப்திக்கு இருக்கும் அதிகாரம் ஒரு அமைச்சருக்கு இருக்கும் அதிகாரமாகும். எனவே, மன்னர் ஆட்சியாக தொடங்கப்பட்டாலும் அவ்வாட்சியின் மூலம் இஸ்லாம் நிலைநாட்டப்படுகிறது.

உலகில் இருக்கும் அனைத்து ஆட்சிகளையும் மறந்து ஸஊதியின் ஆட்சியை மட்டும் இவர்கள் குறை காண்பது எதற்காக? அங்கே இஸ்லாம் நிலைநாட்டப்படுவதை விரும்பாததன் காரணமாகவா இவர்கள் குறை கூறுகிறார்கள் ?

ஜோர்தானின் மன்னராட்சியை ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டால், அங்கே மன்னர் இறந்ததன் பின்னால் மகன் அப்துல்லாஹ் வயதில் சிறியவராக இருந்தாலும் அந்நாட்டின் மன்னராக ஆக்கப்பட்டார். அதற்காக ஷுரா குழுவும் இருக்கவில்லை மஷுராக்களும் இடம் பெறவில்லை.
ஆனால் இந்த வழிமுறைக்கு மாற்றமாக ஸஊதியில் மன்னர் இறந்ததன் பின்னால் அவருக்கு அடுத்து மன்னராக இருப்பதற்குத் தகுதியான இளவரசர்களின் விடயத்தில் உலமாக்களின் ஆலோசனைகளும் தீர்ப்புகளும் பெறப்படுகின்றன. ஆல ஸஊத் என்ற குடும்பத்தினுள் மாத்திரம் அடுத்த மன்னர் தெரிவு செய்யப்பட்டாலும் மன்னராக இருப்பதற்குத் தகுதியானவர்தான் தெரிவு செய்யப்படுகிறார்.
ஏனைய நாடுகளின் மன்னராட்சியின் அடிப்படையில் ஸஊதியின் ஆட்சியும் அமைவதாகக் கருதினால் ஸஊதி மன்னர் அப்துல்லாஹ்வுக்குப் பின்னால் மாஜித் என்பவர் தான் இளவரசராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் மாஜிதுக்கு ஆகவும் பின்னால் வர வேண்டிய நாயிப் என்பவரைத்தான் இளவரசராக நியமித்துள்ளார்கள்.
மாஜிதுக்குப் பதிலாக நாயிப் நியமிக்கப்படக் காரணம் என்னவென்றால், இளவரசர் நாயிப் மார்க்க விடயத்திலும், சட்டங்களைப் பற்றிய அறிவிலும், நாட்டு நடப்புகளைப் பற்றிய அறிவிலும் தரமானவராகவும் தகுதியானவராகவும் இருக்கிறார். இந்த முடிவில் அந்நாட்டின் உலமாக்களின் பங்களிப்பும் பெறப்பட்டிருக்கின்றது.
ஸஊதி நாட்டில் விவகாரங்களிலும் உலமாக்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனைக் கண்டு றாபிழாக்களும், யூதர்களும் திட்டமிட்டு ஸஊதி நாட்டின் மீது குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி அந்நாட்டின் மீது ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
றாபிழாக்களினதும் யூதர்களினதும் வழித்தோன்றல்களான இந்த உம்மத்தின் அனைத்து பித்அத்வாதிகளும் ஸஊதி நாட்டில் மன்னராட்சி இடம் பெறுவதாகக் கூறி அந்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இவர்கள் எந்த நாட்டை குறை கூறுகிறார்களோ அந்த ஸஊதி நாடுதான் அல்லாஹ்வின் வேதமான அல் அல் குர்ஆனை அச்சிட்டு இலவசமாக உலகமெங்கும் பங்கிடுகிறது.
அது மட்டுமின்றி அந்நாடுதான் உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த வாலிபர்களை அழைத்து அங்குள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அதற்கான செலவினங்களையும் அந்நாடே பொறுப்பேற்று, அவ்வாறு கல்வி கற்பவர்களுக்குத் தேவையான நூல்களையும் கொடுத்து, வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து, அந்நாட்டில் கல்வியைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பின்னாலும் அவர்களின் முழு வாழ்க்கைக் காலத்துக்குமான சம்பளங்களையும் வழங்குகிறது.
அந்நாடு இவையனைத்தையும் செய்து கொடுத்ததன் காரணம் பூமியின் அனைத்துப் பகுதியிலும் இஸ்லாம் தரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இவ்வாறு அந்நாட்டில் கல்வி கற்றுத் திரும்பியவர்கள்தான் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் மதனி என்று பட்டத்தைச் சேர்த்துக் கொள்கிறார்;கள். இவர்கள் இலங்கையிலிருந்து சென்று ஸஊதி நாட்டில் கல்வியைப் பெற்றுக் கொண்டு தங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பின்னால் ஸஊதி அரசு வழங்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சொகுசாக வாழ்க்கை நடாத்துகிறார்கள்.
இவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எந்தச் சேவையையும் செய்யவில்லை. மக்களுக்கு இஸ்லாத்தையோ அதன் கொள்கையையோ இவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக, தங்களின் சான்றிதழ்களைக் காட்டி வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள் . அவர்களில் சிலர் றாழாபிழாக்களான ஈரானின் தூதரகத்திலும் கூட பணியாற்றுகிறார்கள்.
ஆனாலும் இவர்களின் பெயர்களுக்குப் பின்னால் மதனி என்று ஒரு பட்டம் இருக்கும். மதீனாவில் படித்து விட்டு வந்ததெல்லாம் வெறுமனே பதவிக்கும், பணம் உழைப்பதற்கும்தான் என்ற நிலை உருவாகிவிட்டது.
இங்கு தப்லீக் ஜமாஅத்தில் இருந்தவன் ஸஊதியில் படிக்கும் காலமெல்லாம் தன்னை வஹ்ஹாபியாகக் காட்டிக் கொள்கிறான். தனது நாட்டுக்குத் திரும்பியதும் மீண்டும் தப்லீகின் கூட்டத்துடன் சேர்ந்து கொள்கிறான். இந்த உதாரணம் அனைத்து இயக்கவாதிகளுக்கும் பொருந்தும். ஸஊதி நாட்டுக்குச் சென்று பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு வந்த பின்னால் இங்கிருந்து கொண்டு ஸஊதி மக்களை வஹ்ஹாபிகள் என்று திட்டித் திரிவதுதான் இவர்களின் வழக்கம்.
ஸஊதி அரேபியா என்ற நாட்டின் மூலம் அனைத்து நாடுகளிலும் கல்வியின் சேவைகளும், நிவாரண சேவைகளும், பள்ளிவாசல்கள், கிணறுகள் போன்றவைகள் கட்டிக் கொடுத்தல் போன்ற சேவைகளும் இன்னும் ஏனைய உதவிகளும் காலம் காலமாக செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த உதவிகளுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகிறது.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னுமொரு விடயம் என்னவென்றால், ஷீஆக்கள் யாருக்கேனும் ஒரு உதவியைச் செய்து விட்டு அதனை உலகமெங்கும் பெரிது படுத்தி விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஸஊதியினால் எத்தனை உதவிகள் உலகமெங்கும் செய்யப்பட்டாலும் அதற்காக எந்தவொரு விளம்பரமும் செய்யப்படுவதில்லை.
இத்தனைக்கும் பின்னால் யூதர்களின் பிரச்சாரத்தைச் சுமந்து கொண்டு ஜமாஅதே இஸ்லாமி, ஹிஸ்புத் தஹ்ரீர், தப்லீக் ஜமாஅத் இன்னும் இது போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மன்னர் ஆட்சியைக் காரணம் காட்டி ஸஊதி அரசைக் குற்றம் கூறுகிறார்கள்.

மன்னர் ஆட்சி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதல்ல. இஸ்லாம் அதனைத் தடை செய்திருந்தால் நாமும் அதனைத் தடை செய்யப்பட்டதாகவே கருதுவோம்.

நிச்சயமாக, கிலாபத் என்பதுதான் இஸ்லாமிய வழிமுறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மன்னராட்சியைக் குறை கூறுபவர்களால் கிலாபத்தையும் கலீபாவையும் உருவாக்க முடியுமென்றால் அதனை நாம் வரவேற்கலாம்.
ஆனால் இந்த இயக்கவாதிகளுக்கு பூமியில் சத்திய மார்க்கம் தலை தூக்குவதையே தாங்க முடியாமல் இருக்கும் போது இவர்களால் பூமியில் கிலாபத் உருவாகப் போகிறதா ? இவர்களால் பூமியில் இஸ்லாம் வளருமா? நிச்சயமாக இல்லை.
இவர்கள் இஸ்லாத்தை அழிக்க வந்தவர்கள். பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதற்கே இடம் கொடுக்காதவர்களுக்கு ஒரு ஆட்சியின் மூலம் இஸ்லாம் வெளிவருவதைத் தாங்கிக் கொள்ள முடியாதுதான். இத்தகைய மனிதர்கள் ஸஊதியைக் குறை கூறுவது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல.
ஸஊதியைக் குறை கூறும் ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இயக்கத்தினர் தங்களது போராட்டத்தில் கிறிஸ்தவர்களையும் கூட சேர்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் போராட்டம் நாட்டுக்காகவே தவிர மார்க்கத்துக்காக அல்ல. இவர்கள் பின்பற்றுதலில் யூத நஸாராக்களின் அடிச்சுவட்டில் எதனையும் விட்டு வைக்கவில்லை.
இவர்களைப் போன்ற பித்அத்வாதிகளைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யா (றஹிமஹுல்லாஹ்) அவரது இக்திழா ஸிராதுல் முஸ்தகீம் என்ற நூலில் விளக்கியிருக்கிறார். அந்நூலில் இத்தகைய வழிகேடர்கள் தங்களின் கொள்கையில், ஈமானில், மார்க்கத்தைப் பின்பற்றுவதில் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பின்பற்றும் விதத்தை இமாம் இப்னு தைமிய்யா (றஹிமஹுல்லாஹ்) எடுத்துக் காட்டுகிறார்.
தங்களின் வழிமுறையாக யூதர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்ட ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இயக்கத்தின் அடிப்படையான நூல்களைத் திறந்து பார்த்தால் அதில் ஷீஆக்களின் அடிப்படைகளை மிக அதிகமாகக் காணலாம். அதாவது ஷீஆக்கள் யூதர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதனால் ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்கத்தின் வழிமுறை யூதர்களின் வழிமுறையாகவே இருக்கிறது.
வரலாற்றில் ஷீஆவின் கூட்டத்தை உருவாக்கிய யூதனான அப்துல்லாஹ் இப்னு ஸபா இஸ்லாத்தினை சீரழித்து விட்டுச் சென்றான். அதே போன்று ஷீஆவைச் சேர்ந்த தூஸி என்பவன் வரலாற்றிலேயே அறிவிப்பாளர்களைப் பற்றி முதல் முதலாக பொய் வரலாற்றை உருவாக்கினான். இவன் யஹுதி அறிவிப்பாளர்களை ஸஹீஹாக்கியதோடு ஸஹாபாக்கள் அனைவரையும் காபிராக்கினான். இவ்வாறான பொய்யர்களின் அறிவிப்புகளை தப்லீக் ஜமாஅத்தினர் பக்தியோடு வாசிக்கும் அமல்களின் சிறப்புகள் என்ற நூலில் கூட நாம் காணலாம்.
எனவே இது போன்ற வழிகெட்ட கூட்டங்கள் அனைத்தும் எந்த பூமியில் இஸ்லாம் தூய்மையாக வாழ்கிறதோ அந்த பூமியைக் குறை கூறுவது தங்களின் ஒரு முக்கிய கடமையாக ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு இந்த விடயத்தில் நாம் கூறும் உபதேசம் என்னவென்றால், நீங்கள் வழிகேடர்களின் நச்சுக் கருத்துகளை செவிமடுப்பதன் மூலம் உங்களின் காலங்களை வீணாக்குவதோடு உங்கள் வாழ்க்கையை சீரழிவுக்குள்ளாக்க வேண்டாம்.
இஸ்லாத்தைத் தரமாகக் கற்றுக் கொள்ளுங்கள் அல்குர்ஆனின், அஸ்ஸுன்னாவின் கல்வியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஸுன்னாவின் உலமாக்கள் கூறும் உபதேசங்களைப் பெற்று அதன் படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
காலம் செல்லச் செல்ல சரியான தருணம் வரும் போது இந்த உம்மத்தின் திருடர்களை இன்ஷா அல்லாஹ் நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s