ஸலப் உலமாக்கள் அகீதாவை முதன்மையாக மீட்டி மீட்டி படிப்பிப்தும் அது ஏன் என்பதும்

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

பதில் : இஸ்லாமிய அழைப்புப் பணியில் அஸ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த இமாம்களும் ஸலப்களின் பாதையின் பால் மக்களை அழைப்பதற்கு முன்வருகின்ற சகோதரார்களும் தங்களது அழைப்புப் பணியைச் செய்யும் போது மார்க்க சட்டதிட்டங்களான பிக்ஹ் விடயங்களில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையிலும் அந்த பிக்ஹ் விடயங்களைப் பற்றி அதிகமான விளக்கம் கொடுக்காமலும் அதற்கென்று அதிகமான நேரத்தை ஒதுக்காமலும் அதனை விடவும் அகீதாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தங்களின் வழிமுறையாகக் கைக்கொண்டு வருகிறார்கள்.

அது மட்டுமின்றி அகீதா விடயங்களில் பல பாடங்கள் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அம்சத்தை அவர்கள் அடிக்கடி மீட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதாவது, அல்லாஹ்வின் நம்பிக்கையைப் பற்றியும், அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் விளங்கும் அடிப்படைகளைப் பற்றியும், இன்னும் அப்பெயர்களையும் பண்புகளையும் விளங்கும் விடயத்தில் ஏற்படுகின்ற வழிகேடான போக்குகளைப் பற்றியும் அதனால் வழிகேடானவர்களைப் பற்றியும் அடையாளம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
ஸஹாபாக்களின் காலத்திலும், தாபிஈன்களின் காலத்திலும், தபஅ தாபிஈன்களின் காலத்திலும், அதன் பின் வந்த இமாம்களின் காலத்திலும், இன்னும் இன்று வரை வாழுகின்ற உலமாக்களின் காலம் வரை அழைப்புப் பணியில் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பதை ஸலப் உலமாக்கள் தங்களின் வழிமுறையாகக் கையாண்டு வருகிறார்கள்.
ஸலப் உலமாக்கள் தங்கள் வகுப்புகளில் பிக்ஹ் விடயங்களுக்கு அதிக கவனம் செழுத்தாமல் அவற்றை வெறுமனே கேள்விகளுக்கு பதில் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதற்கென்று விரிவான வகுப்புகளை எடுப்பதற்கு அவர்கள் அதிக நேரத்தை ஒதுக்குவதில்லை.
உலமாக்கள் இவ்வாறு அகீதாவுக்கு முன்னுரிமை அளிக்கும் விடயத்தில் பல சகோதரர்களும் பல விதமாகக் கேள்வி கேட்கின்றனர். அவர்களில் சிலர் இந்த வழிமுறையை கண்டிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதாவது, இவர்களுக்கு எதை எடுத்தாலும் அகீதாவென்றும், அஸ்மா வ ஸிபாத் என்றும், அன்னார் வழிகேடர் இவர் பித்அத்வாதி என்று சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறு ஒன்றும் பேசுவதற்கு இல்லை என்று குறை கூறுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டு எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நிச்சயமாக இந்தக் குற்றச்சாட்டுகளை ஸலப்களின் பாதையைத் தெரியாதவர்கள் கூறுவது ஆச்சரியமான விடயமல்ல.

அல்லாஹுஸு ப்ஹானஹுவ தஆலா தனது அடியார்கள் திரும்பத் திரும்ப தங்களின் தொழுகையில் ஓத வேண்டும் எனக் கடமையாக்கியுள்ள சூறதுல் பாத்திஹாவில் இரட்சகனாகிய அவன் தன்னைப் புகழ்வதைக் கொண்டு ஆரம்பிக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்

அனைத்துப் புகழும் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது

(ரஹ்மான்) உலகில் அனைவருக்கும் அருள் புரிபவன்

(ரஹீம்) மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் நிலையாக அன்பு காட்டி அருள் புரிபவன்

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி

(எங்கள் இரட்சகனே !) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

நீ எங்களை நேரான வழியில் நடாத்துவாயாக

எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடாத்துவாயாக)

(அது உன்) கோபத்துக்குள்ளானவர்களான (யூதர்களின் வழி)யல்ல அன்றியும் வழிகேடர்களான (கிறிஸ்தவர்களின் வழியும)ல்ல.

தினமும் மீட்டி ஓதப்படுகின்ற இந்த சூறா எமக்கு அல்லாஹ்வின் மீதான ஏகத்துவத்தை ஞாபகமூட்டுகின்றது. இதில் முதலாவதாக, இரட்சகனே இல்லை என்று கூறக் கூடிய மனிதர்களுக்கு ஒரு பதிலாக அல்லாஹ் தன்னை அகிலத்தின் இரட்சகன் எனக் கூறுகின்றான். இந்த வாசகம் தவ்ஹீதுர் ருபூபிய்யாவைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அல்லாஹ் அவனது செயல்களில் தனித்துவமானவனாக இருப்பதோடு அவனது செயல்கள் மூலம் அவன் அகிலத்தில் அனைத்தின் மீதும் ஆதிக்கமுள்ளவனாக இருப்பதைக் கூறுவதுதான் தவ்ஹீதுர் ருபூபிய்யா எனப்படுகின்றது.
இதனைத் தினமும் ஓதுகின்ற போது இரட்சகன் ஒருவன் இருக்கிறான் என்பதும் அகிலத்தின் அனைத்தும் அவ்விரட்சகனின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்தான் இருக்கிறது என்பதையும் அவனது அடியார்களுக்கு அவன் ஞாபகமூட்டுகின்றான். அவ்வாறு அடிப்படையான ஈமானைக் கொண்டு ஞாபகமூட்டுவதன் மூலம் அடியார்கள் தங்களின் தொழுகையை ஆரம்பிக்கின்றனர்.

அதன் பின்னால், தன் அருளைத் தன் அடியார்களுக்கு அவன் கூறிக் காட்டுகின்றான். அர்ரஹ்மான் என்ற வாசகத்தின் மூலம் தான் உலகத்தில் அனைவருக்கும் அருள் புரிகின்றவன் என்பதையும் அர்ரஹீம் என்ற வாசகத்தின் மூலம் தான் மறுமையில் முஃமின்களுக்கு மாத்திரம் முடிவின்றி அன்பு காட்டுபவன் என்பதையும் அவன் கூறிக் காட்டுகிறான் – (இதுவே ரஹ்மான் என்பதற்கும் ரஹீம் என்பதற்கும் றஸு லுல்லாஹ் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்த விளக்கமாகும். நிச்சயமாக இந்த பூமியில் அல்லாஹுதஆலா முஸ்லிம் என்றும் காபிர் என்றும் பாராமல் தனது அனைத்து அடிமைகளுக்கும் அருள் புரிகின்றான். அவ்வாறு அருள் புரியவில்லையென்றால் யார்தான் இந்த பூமியில் வாழ முடியும்?

இந்த வாசகங்கள் இன்னுமொரு அம்சத்தையும் எமக்கு உணர்த்துகின்றது. அதாவது, அல்லாஹ்வின் அருளை இந்த உலகில் அனைவரும் அனுபவித்தாலும் அவனது அருளுக்குக் கீழாக அனைவரும் வாழ்ந்தாலும் அழிந்து விடக்கூடிய இந்த உலக வாழ்க்கையின் பின்னால் அல்லாஹ்வின் அருள் அவனது அடியார்களில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டுமே நிலையாகக் கிடைக்கும் என்பதையும் அவன் எமக்கு உணர்த்துகிறான்.
அவர்கள்தான் இந்த உலகில் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடந்த முஃமின்கள். எனவே, நாம் அந்த முஃமின்களின் தரத்தை உலகில் அடைந்து கொண்டால் மறுமையில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு சாத்தியம் இருக்கும். அதற்காக நாம் உலக வாழ்வில் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.
அதன் பின்னால், மனிதர்கள் உலகில் அக்கிரமம் செய்து, வரம்பு மீறி நடந்து, அகங்காரத்துடன் செயற்பட்டாலும் தீர்ப்பளிக்கப்படும் ஒரு நாளில் அல்லாஹ் மாத்திரமே சர்வ வல்லமை பொருந்திய அதிபதியாக இருப்பான் என்பதைத் தன் அடியார்களுக்கு நினைவூட்டுகின்றான்.

இதனை அந்த அடியார்கள் தங்களின் அனைத்துத் தொழுகைகளிலும் மீட்டி மீட்டிக் கூறுகின்றார்கள்.

அதன் பின்னால், தனது அடியார்கள் தனக்கு மட்டுமே வணக்கத்தைச் செழுத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் (எங்கள் இரட்சகனே !) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் என்ற வாசகத்தைக் கற்றுத் தருகிறான்.

அதன் பின்னால், தனது அடியார்கள் தன்னிடம் பிரார்த்திக்க வேண்டிய ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தருகிறான். அதுதான், நீ எங்களை நேரான வழியில் நடாத்துவாயாக! என்ற பிராத்தனையாகும்.
நாம் அவனிடமே உதவி தேடி, அவனை மட்டுமே வணங்கி, மறுமையில் அவனது தீர்ப்பை எதிர்பார்த்து, உலகில் அவனது அருளிலே வாழ்ந்து, அவனுடைய அருளையே மறுமையிலும் எதிர்பார்த்து, அல்லாஹ்வாகிய அவன் மட்டுமே அகிலம் அனைத்துக்கும் இரட்சகன் என்பதை நம்பி அந்த இரட்சகனிடமே நாம் எமக்கு நேர்வழியையும்; காட்டித்தருமாறு கேட்கிறோம்.

அதன் பின்னால், நேர்வழியில் சென்றவர்களின் பாதையைப் பின்பற்றி நடப்பதற்காக “எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடாத்துவாயாக) என்ற பிரார்த்தனையின் மூலம் எமக்கு முன்னால் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் சென்ற அப்பாதையின் பால் வழிகாட்டுகின்றான்.

அதன் பின்னால், தனது அருள் பெற்ற அடியார்கள் சென்ற பாதைக்கு முறணான பாதையில் செல்வதை எச்சரிக்கும் விதமாக அல்லாஹ்வின் கோபத்துக்கு உள்ளானவர்களினதும் வழிகெட்டுப் போனவர்களினதும் பாதையிலிருந்து தப்பியிருப்பதற்கு தன்னிடம் உதவி தேடுமாறும் கூறி சூறாவை முடிக்கின்றான்.

இந்த சூறா நப்ல் (உபரியான) தொழுகைகளிலும், பர்ழ் தொழுகைகளிலும் ஓதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூறா எவ்வாறு அல்லாஹ்வை எமக்கு மீட்டி மீட்டி ஞாபகமூட்டுகிறதோ அதே அடிப்படையைக் கையாண்டே சுன்னாவின் இமாம்களும் மக்களுக்கு அல்லாஹ்வை அடிக்கடி ஞாபகமூட்டுவதற்காக அகீதாவின் (கொள்கையின்) கல்வியை அடிக்கடி எத்தி வைக்கின்றனர்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும்படியும், அல்லாஹ்வை அவனது பெயர்களைக் கொண்டும் பண்புகளைக் கொண்டும் தூய்மையாக விளங்கும் படியும் அவர்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். இன்று இந்தத் தூய நம்பிக்கை மனிதனின் உள்ளத்தில் குடி கொள்ளாததன் காரணமாகவே வெறுமனே அல்லாஹ் என்று ஒரு வார்த்தையில் கூறி விட்டு தனக்குத் தேவை போன்று மனிதன் செயற்படுகிறான்.
மனிதனின் இந்நிலையின் காரணமாகவே அல்லாஹுதஆலா தினமும் தொழுகின்ற அனைத்துத் தொழுகைகளிலும் ஓதுவதற்குக் கடமையாக்கியிருக்கின்ற சூறா பாத்திஹாவில் அடிப்படை நம்பிக்கையோடு தொடர்பான அம்சங்களை அமைத்திருக்கிறான்.
இதே அம்சங்களைத்தான் ஸலப் உலமாக்களும் தங்களின் கற்பித்தல் விடயத்தில் கையாள்கிறார்கள். சுருக்கமாக, ஸலப் உலமாக்கள் அகீதா என்ற பகுதியில் பின்வரும் விடயங்களை அதிகம் எடுத்து வைப்பார்கள்

அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் மனிதர்களுக்கு அடையாளம் காட்டுவது

அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டிய வழிகெட்ட அடிப்படைகளைக் எடுத்துக் காட்டுவது

மனிதர்கள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மீது தூய்மையாக வாழ்வதற்கு வழிகாட்டுவது

அனைத்துக் காரியங்களிலும் எவ்வாறு அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வாழ்வது என்பதைப் பற்றி விளக்குவது

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் விடயத்தில் மனிதன் செய்கின்ற துரோகங்களை அடையாளம் காட்டுவது

நம்பிக்கை விடயத்தில் அநீதியிழைக்காமல் இருப்பதற்காக நம்பிக்கையின் சரியான வடிவத்தைப் கற்றுக் கொடுப்பது

இதனைத்தான் ஸலப்கள் தங்களின் அழைப்புப் பணியின் முக்கிய அடிப்படையாக அமைத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி, மார்க்கத்தினுள் யூதர்கள் மூலமாக, அல்லது கிறிஸ்தவர்கள் மூலமாக, அல்லது ஏனைய வழிகளில் நுழைந்துள்ள வழிகேடுகளை மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து, எமக்கு முன்னால் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்ட சமூகமான ஸஹாபாக்களின் சமூகம் ஈமானைப் பெற்றுக் கொண்ட வழிமுறையை விரிவாக எடுத்துக் காட்டி மனிதர்களைத் தூய்மைப்படுத்துவதாக இந்த அகீதாவின் அழைப்புப் பணி அமைந்துள்ளது.

சூறதுல் பாத்திஹா கூறுகின்ற அம்சங்களை நாம் சற்று ஆழமாகக் கவனித்தால் அதன் அடிப்படைகளை ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அழைப்புப் பணியில் கண்டு கொள்ள முடியும். ஸலப்களின் அகீதாவை நோக்கிய இவ்வழைப்புப் பணியின் மூலம்தான் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடிய தூய்மையான அடிமைகள் உருவாகின்றனர்.
மாறாக, அல்லாஹ்வின் மீதான் நம்பிக்கையைப் பற்றிய அறிவைப் பெறாததன் காரணமாக இரட்சகனுக்குக் கீழ்படியும் பண்பும், அவனுக்கு அஞ்சி நடக்கும் தன்மையும், நேர்வழியில் மட்டுமே செல்ல வேண்டுமென்ற எண்ணமும், வழிகேடுகளை விட்டும் தூரமாக வேண்டுமென்ற எண்ணமும் மனிதர்களிடத்தில் இல்லாத போது அந்த மனிதர்கள் உண்மையைத் தெரிந்த பின்னாலும் அதனைப் பின்பற்றும் மனிதர்களாக இருக்க மாட்டார்கள், அறிந்தவற்றைக் கொண்டு அமல் செய்கின்றவர்களாக இருக்க மாட்டார்கள்.
இத்தகைய மனிதர்களிடத்தில் அவர்கள் கொள்கையை உறுதியாக பெற்றவர்களாக ஆகும் வரை அவர்களின் செயற்பாடுகளில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. கொள்கை உறுதியாக இருக்குமளவுக்கு பின்பற்றுதலும் அதிகரிக்கும். கொள்கை பலவீனமாக இருக்குமளவுக்கு பின்பற்றும் போக்கு மிக அரிதாகவே காணப்படும்.
இதில் நூல்கள் பலவற்றைக் கற்றுத் தேரிய பேரறிஞர்களும் விதிவிலக்கானவர்களல்ல. அவர்களிடத்திலும் அவர்கள் கொள்கையைத் தரமாகப் புரிந்திருந்தால்தான் அவர்களின் செயற்பாட்டிலும் உறுதி இருக்கும். இதன் காரணமாகவே அறிஞர்கள் என்று சொல்லப்படக் கூடியவர்களிடத்தில் கொள்கையினைப் பற்றிய அறிவு இல்லாத போது அவர்களின் வாழ்வில் பின்பற்றுதலின் பலவீனத்தையும், மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் போக்கையும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்காத தன்மையையும் நாம் அவதானிக்க முடியும்.
இன்னுமொரு விதமாகக் சொன்னால், மனிதர்களின் பிக்ஹ் விடயத்தில் காணப்படுகின்ற குறைபாட்டுக்கான காரணமும் அவர்களின் அகீதாவில் குறைபாடு இருப்பதுதான். அதாவது,

அல்லாஹ்வின் நம்பிக்கை பற்றிய கல்வியில் உள்ள குறைபாடு

ஸஹாபாக்கள் சென்ற பாதைதான் நேர்வழி என்பதை உறுதியாக நம்புவதில் உள்ள குறைபாடு

இந்த அடிப்படையான குறைபாட்டின் காரணமாக அக்குறைபாட்டைக் கொண்ட மனிதன் கொடுக்கின்ற பிக்ஹின் தீர்ப்பிலும் குறைபாடுகள் அமைந்துவிடும்.

அது மட்டுமின்றி வட்டி போன்ற ஹராமானவற்றை அது ஹராம் என்று தெரிந்த பின்னாலும் தனது வாழ்வில் ஒரு கஷ்டம் வந்ததற்காக அந்தக் கஷ்டத்தைக் காரணம் காட்டி ஹராமானதைச் செய்வதற்கும் அந்த மனிதன் தயங்கமாட்டான். அதனைத் தவிர்ந்து கொள்வதற்காக வேறு மாற்று வழிகள் உள்ளதா என்பதையும் கூட கவனிக்க மாட்டான். கஷ்டத்தில் பொறுமையோடு இருந்து தனது இரட்சகனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டான்.
அல்லாஹ்வின் மீதான அச்சம் இந்த மனிதனை விட்டும் போய்விட்டது. தனக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து தப்பிப்பதே அவனது நோக்கமாக அமைந்து விட்டது. இந்நிலையில் அவன் இருக்கும் போது அவன் தனது தொழுகையில்
(எங்கள் இரட்சகனே !) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் என்று பிரார்த்திப்பதில் எந்தவித அர்த்தமுமில்லை.
அல்லாஹ்விடம் மட்டுமே உதவியைத் தேடுகிறேன் என்று சொல்லும் மனிதன் அல்லாஹ்வுடனும் அல்லாஹ்வின் தூதருடனும் யுத்தம் செய்வதற்கு சமமாகக் கருதப்படுகின்ற வட்டியோடு தொடர்பு வைக்கிறான். உன்னையே நாங்கள் வணங்குகிறோம்! உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்! என்று கூறிவிட்டு அல்லாஹ்வுடன் யுத்தம் செய்கிறான். இது போன்ற நிலைகள் ஒரு முஸ்லிமை வந்தடைவதன் காரணம் அவனிடத்திலுள்ள கொள்கை ரீதியான குறைபாடாகும்.
அதிலும் குறிப்பாக தன் இரட்சகனை அவன் அறியாமல் இருப்பதனால் தன் வாழ்வில் முகம் கொடுக்கின்ற கஷ்ட நிலையில் தனது இரட்சகனை அவன் நினைவு கூறி அந்தக் கஷ்டத்தில் பொறுமையோடு இருப்பதற்கு மறந்து விடுகிறான். இந்த விடயத்தில் அவன் எந்தளவுக்குத் தரமானவனாக இருப்பானோ அந்தளவுக்கு அவனது வாழ்வில் அறிந்ததை நிலைநாட்டுவதில் தரமானவனாக இருப்பான்.
இந்தப் பண்பு மனிதர்களிடத்தில் இல்லாததன் காரணமாகவே சமூகத்தில் இன்று முஸ்லிம்கள் ஷிர்க் என்று அடையாளம் காட்டிய பின்னாலும் குப்ர் என்று எச்சரித்த பின்னாலும் அவற்றை அல்லாஹ்வுக்கு அஞ்சி விட்டுவிடுவதில் கவனமற்றவர்களாக இருக்கின்றனர்.
அது மட்டுமின்றி எம்மில் பலர் அல் குர்ஆனும் சுன்னாவும் காட்டித் தராத விடயங்களுக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் செல்வத்தையும் செலவு செய்து அதற்காகவே தமது வாழ்வை அர்ப்பணிக்கின்றனர்.
குப்ர் நாட்டில் வாழ்வது மட்டுமல்லாது அந்த நாட்டின் குப்ரிய்யத்தான சட்டங்களை நிலைநாட்டுவதற்கென்று போராடுகின்றனர். அல்லாஹ் அல்லாதவற்றின் திருப்தியை நாடி இவற்றைச் செய்வதனூடாக அவர்கள் ஷிர்க்கிலும் குப்ரிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.

 இது போன்ற நிலை மாற வேண்டுமாயின் மனிதர்களின் இதயங்களில் அகீதா எனும் கொள்கை பதியப்பட வேண்டும்.

இந்த முஸ்லிம் சமூகத்தில் ஏகத்துவம் என்பது வெறுமனே அந்த வார்த்தையோடு முடிந்து விடுகிறதே தவிர ஏகத்துவத்தை அறிந்து அதன் அடிப்படைகளைப் புரிந்து அதன் விளக்கங்களைப் பெற்று அதனடிப்படையில் செயற்படுவதன் மூலம் ஏகத்துவம் என்பது நிலைநாட்டப்படுவதில்லை.
இந்த நாட்டில் நாங்கள்தான் தவ்ஹீத்வாதிகள் எனக் கூறிக் கொண்டு தவ்ஹீதைப் பேசுகின்றவர்களின் நிலை என்னவென்றால், குப்ரான சட்டங்களைக் கொண்ட இந்நாட்டில் நடைபெறுகின்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்களின் ஜும்ஆ குத்பாக்களில் பேசுகின்ற நிலையில் இந்தத் தவ்ஹீத்வாதிகளின் நிலை உள்ளது.
தேர்தலில் வாக்களிப்பது ஹராம் என்பதை பல உலமாக்கள் மீண்டும் மீண்டும் இந்த உம்மத்திற்கு நினைவுகாட்டியதன் பின்னாலும் அல்லாஹ்வின் மீதான தவக்குல் என்பது இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்பவர்களாக இந்நாட்டிலுள்ள தவ்ஹீத்வாதிகள் இருக்கின்றனர்.
இவர்கள் தங்களின் கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் அப்பெயரைச் சுமந்தவர்களின் நடவடிக்கைகள் குப்ரையும் ஷிர்க்கையும் வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன.
இக்கூட்டங்கள் சொல்கின்ற தவ்ஹீத் என்பது அல்லாஹ்வுக்காகச் சொன்ன தவ்ஹீத் அல்ல. அது அல்லாஹ்வின் மார்க்கத்தினை நிலைநாட்டுவதற்காகச் சொன்ன தவ்ஹீத் அல்ல. இன்னும் இவர்கள் சொல்கின்ற தவ்ஹீத் அல் குர்ஆனும் சுன்னாவும் கூறுகின்ற தவ்ஹீதோ, ஸஹாபாக்களிடம் இருந்த தவ்ஹீதோ அல்ல.
மாறாக, தவ்ஹீத் ஜமாஅத் என்ற இக்கூட்டங்கள் கூறுகின்ற தவ்ஹீத் (ஏகத்துவம்) வெறுமனே தங்களின் கூட்டத்திற்கு வைத்துக் கொண்ட ஒரு பெயர் மாத்திரமே.
எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் கொள்கையினை அடிக்கடி நினைவுபடுத்துவது அவசியமாகும். அகீதா அல்லது கொள்கை என்பது எமது சமூகத்தின் முன்னால் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப் பட்டால்தான் சிலருக்காவது தங்களின் வாழ்வில் அல்லாஹ்வின் சட்டத்தைத் தவிரவுள்ள வேறொரு சட்டத்தை நிலைநாட்டி அதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டும் விலகியிருப்பதற்கான வாய்ப்பு அமைவதோடு தங்களின் வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டுகின்ற தூய அடியார்களாக அவர்களை அக்கொள்ளை மாற்றி வைக்கும்.

எங்கள் சமூகம் அல்லாஹ்வின் மீதான ஏகத்துவத்தை விளங்காத சமூகமாக இருக்கிறது. இதே போன்றுதான் வரலாறு நெடுகிலும் இந்த முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்தானோ அவர்களைத் தவிர! யரெல்லாம் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்வதற்கும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டுமே பின்பற்றுவதற்குத் தகுதியானவராக எடுப்பதற்கும் உறுதி கொண்டார்களோ அத்தகைய கொள்கைவாதிகள்தான் வரலாற்றின் அனைத்துக் காலங்களிலும் தங்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் மார்க்கத்தின் அனைத்து சட்டங்களையும் நிலைநாட்டினார்கள்.
அவர்கள் சுமந்த கொள்கையின் பிரதிபளிப்பை அவர்களின் சொந்த வாழ்விலும், குடும்ப வாழ்விலும், வியாபாரத்திலும், சமூக வாழ்விலும், அவர்களின் சிந்தனையிலும் காண முடிந்தது. மார்க்கம் வகுத்துத் தந்த எல்லைதான் அவர்களின் செயற்பாட்டின் எல்லையாக இருந்தது.
அவர்கள் எச்சமூகத்தின் மத்தியில் வாழ்ந்தார்களோ அச்சமூகம் அவர்களை விரும்பினாலும் வெறுத்தாலும் மார்க்கத்தின் சட்டமென்று வந்துவிட்டால் அதனை நிலைநாட்டுவதில் முந்திக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவ்வாறு கொள்கைவாதிகள் வாழ்ந்ததன் காரணமாகவே அவர்களில் தனி மனிதனாக வாழ்ந்தவர்களும் தங்களின் செயல்களினால் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். அத்தோடு அல்லாஹ்வின் உதவியையும் பெற்றுக் கொண்டார்கள்.
இந்த பூமியில் கொள்கையை மிகச் சிறப்பாகச் சுமந்து செயற்பட்ட ஸஹாபாக்களும், அவர்களைப் பின்தொடர்ந்த தாபிஈன்களும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களும் தங்களோடு கொள்கையைச் சுமந்து கொண்டு பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று அக்கொள்கையை எத்தி வைத்தார்கள். அவர்கள் சென்று வாழ்ந்த இடங்களில் தனி மனிதனாக வாழ்ந்த போதும், சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்த போதும் வெற்றி பெற்ற மனிதர்களாகவே வாழ்ந்தார்கள்.
வெற்றி என்பது பெயரையும் புகழையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்வதில் இல்லை. வெற்றியென்பது அல்லாஹ்வின் திருப்தியை அடைவதும் இந்த பூமியில் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அல் குர்ஆனையும் சுன்னாவையும் வாழ்வில் அமுல்படுத்துவதுமாகும். இதுதான் அன்று இந்த உம்மத்தில் கொள்கையைச் சுமந்தவர்கள் வாழ்ந்த வழிமுறையாகும்.
இன்று நாம் வாழும் காலத்தில் எமது சமூகத்தினதும், குடும்பத்தினதும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை நிலைநாட்டுவதற்கு அல்லாஹ் எமக்கு சூழலை அமைத்துத் தந்து விட்டால் அதுவும் நாம் பெற்றதொரு வெற்றியாகும். இதனையும் விடப் பெரியதொரு வெற்றி வேரெதுவாகவும் இருக்க முடியாது.
ஏனெனில், அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டும் சூழலில் நாம் வாழும் போது அது எம்மை சுவனத்தை நோக்கி நெருக்கி வைக்கிறது. சுவனத்தைச் சென்றடைவதை விடவும் மகத்தான வெற்றி வேறு என்னதான் இருக்க முடியும்.

சமூக அந்தஸ்தைக் கொண்டு உலகில் எமக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்று நாம் எமது வாழ்வை அமைத்துக் கொண்டால் அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டும் பாக்கியம் எம்மை விட்டும் அகன்று விடும். அதன் விளைவாக அல்லாஹ் ஏவியதை நிலைநாட்ட முடியாமலும் அல்லாஹ் தடுத்ததை தவிர்ந்து கொள்ள முடியாமலும் போய்விடும்.

மேலும், சுன்னாவை விட்டுவிடுவதற்கு காரணங்கள் பல கூற வேண்டிய துர்ப்பாக்கியசாலிகளாக ஆகிவிடும் நிலை உருவாகி விடும். இது நரகத்தின் பாதைக்கு இட்டுச் செல்கின்ற காரியங்களாகும். இது ஒருபோதும் வெற்றியாக அமைய முடியாது.

எனவே, நாம் அனைவரும் உண்மையான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு

அல்லாஹ்வின் நம்பிக்கையைத் தரமாக எமது இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்

அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற சூழலை எம் வாழ்வில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும்.

எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றியை விடவும் பெரிய வெற்றி யாருக்குக் கிடைக்க முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்களது குடும்பமும், கோத்திரத்தாரும், அவர்கள் வாழ்ந்த சமூகமும் எதிர்த்து நின்ற பின்னும் அல்லாஹு தஆலா தன் தூதருக்கு வெற்றியைக் கொடுத்தான்.

சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக மக்காவில் சத்தியம் வளர்வதற்கு இடம் கிடைக்காவிட்டாலும் முஸ்அப் இப்னு உமைர் (றழியல்லாஹு அன்ஹு) என்ற நபித் தோழரை யத்ரிப் (அன்றைய மதீனா) என்ற பிரதேசத்துக்கு அனுப்பி அந்நபித்தோழர் மூலம் யத்ரிப் என்ற பூமியில் வாழ்ந்த சமூகத்துக்கு மத்தியில் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்பி விடுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான்.
அதன் பின்னர் நபிகளாரும் யத்ரிபுக்கு ஹிஜ்ரத் சென்று அவர்களின் அழைப்பின் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்பி, மீண்டும் மக்கா திரும்பி அங்குள்ள அல்லாஹ்வின் வீடான கஃபாவை அனைத்து , இணை வைப்பை விட்டும் சுத்தப்படுத்தி இஸ்லாத்தை அந்த மண்ணில் நிலைநாட்டினார்கள். இதுவே தனது தூதருக்கு அல்லாஹ் கொடுத்த உன்னதமான வெற்றியாகும்.
இஸ்லாத்தின் இன்று வரையுள்ள வரலாற்றைப் பார்க்கும் போது எந்தவொரு சுன்னாவின் இமாம்களும் அவர்களுடைய சமூகத்தில் சர்ச்சைகளுக்கு முகம் கொடுக்காமல் வாழவில்லை. அவர்கள் கொடுத்த அனைத்து தீர்ப்புகளையும் அவர்களின் சமூகங்கள் ஏற்றுக் கொண்டு வரவேற்கவில்லை.
மாறாக, பல மறுப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டி அதனைத் துணிவோடு எத்திவைத்தார்கள். அன்று சுன்னாவின் இமாம்கள் கொடுத்த குரல்கள் இன்று இஸ்லாமிய உம்மத்திற்கு அதன் காரியங்களில் தீர்ப்புகள் கூறுவதற்கான ஆதாரங்களாக மாறிவிட்டன. அவர்கள் அன்று பின்பற்றிய நடைமுறைகள் இன்று இஸ்லாமிய உம்மத் பின்பற்ற வேண்டிய அடிச்சுவடுகளாக மாறிவிட்டன.
அவர்கள் அன்றும் வெற்றியோடு வாழ்ந்தார்கள். அவர்களின் குரல்கள் இன்றும் வெற்றியோடு வாழ்கிறது. இந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணம், அவர்கள் தூய கொள்கையுடனும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும் வாழ்ந்ததுதான்.
எனவேதான் அந்த வெற்றியை எல்லாக் காலங்களிலும் இந்த இஸ்லாமிய உம்மத் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக உலமாக்கள் அகீதாவைப் பற்றிய கல்வியை மக்களுக்கு அதிகம் கொடுக்கின்றனர்.
அகீதவைப் பற்றிக் கற்பதன் மூலம் நாம் நேர்வழியை அடைந்து கொள்வதோடு, நேர்வழிக்கு முரணான வழிகேடுகளின் அடிப்படைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்வதன் மூலம் அனைத்துக் காலங்களிலும் வழிகேட்டின் பிடியிலிருந்து தப்பி வாழ முடியும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s